டிரம்ப், மோடி பயணிக்கும் சாலையில் பிரமாண்ட தடுப்புச்சுவர்


ஆமதாபாத் பிப்16,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-மெலனியா தம்பதியர், பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் பிரமாண்ட ரோடு ஷோ, 24-ந் தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது. இதில், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 10 கி.மீ. தொலைவுக்கு அவர்கள் சாலை வழியாக செல்கிறார்கள். இதற்காக அந்த சாலை அழகுபடுத்தப்படுகிறது.இந்த சாலையோரத்தில் சரணியாவாஸ் என்ற குடிசை பகுதி அமைந்துள்ளது. இந்த குடிசைகளில் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடிசைப்பகுதியை மறைக்கிற விதமாக சுமார் அரை கி.மீ. நீளத்துக்கு, 7 அடி உயரத்தில் பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்பப்படுகிறது. இந்தப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.இதுபற்றி ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “குடிசைப்பகுதியை மறைக்கும் விதமாக 600 மீட்டர் நீளத்துக்கு 6 முதல் 7 அடி உயரத்துக்கு தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. சாலையோரத்தில் பசுமையான செடிகள் வைத்து அழகுப்படுத்தப்படுகிறது” என குறிப்பிட்டார்.