தயார் நிலையில் தானமாக வழங்கப்பட்ட 33 ஏக்கர் நிலம் அமைக்கப்படுமா அரசு மருத்துவ கல்லூரி!


தாம்பரம் பிப்16, 
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில், சென்னை மாநகராட்சிக்கு மருத்துவமனை அமைக்க, தானமாக வழங்கப்பட்ட, 33 ஏக்கர் நிலம், மெல்ல ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. அந்த நிலத்தை மீட்டு, அரசு மருத்துவ கல்லுாரி அல்லது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை அமைக்கும் அறிவிப்பை, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சியில், அழகப்ப செட்டியார் என்பவர், 33 ஏக்கர் நிலத்தை, சென்னை மாநகராட்சிக்கு தானமாக கொடுத்தார். அந்த இடத்தை, மருத்துவமனை கட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, அவர் தானப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.உரிய பராமரிப்பின்றி இருந்த இடத்தில், சிலர் ஆக்கிரமித்து, 'கிரிக்கெட் அகாடமி' என்ற பெயரில், கட்டணம் வசூலித்து, கிரிக்கெட் பயிற்சி அளித்தனர்.செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பின், சிகிச்சை பெற விரும்புவோர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்துார், தாம்பரம், கிண்டி, அண்ணாசாலை என, இரண்டு மணி நேர போக்குவரத்து நெரிசலுக்கு பின் தான், சென்னை ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல், பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தின் தலைமை மருத்துவமனையாக கருதப்படும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை யில், தினமும், 12 ஆயிரம் பேர், சராசரியாக சிகிச்சை பெறுகின்றனர். மேலும், 3,000 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுவதோடு, தினமும், 50 முதல், 60 வரையிலான பல்வேறு அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகின்றன. இந்த மருத்துவமனை, 25 ஏக்கர் பரப்பளவிலும், மருத்துவ கல்லுாரி மற்றும் விடுதிகள், 15 ஏக்கர் பரப்பளவில் என, 40 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.மாடம்பாக்கத்தில், மருத்துவமனை பயன்பாட்டிற்காக, ஒரே இடத்தில், 33 ஏக்கர் பரப்பளவு நிலம் இருப்பதால், அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனை அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதை தவிர, 2019ல், லண்டன் சென்ற முதல்வர் இ.பி.எஸ்., சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை, தமிழகத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர். கிங்ஸ் மருத்துவமனையை, சென்னையில் நிறுவ, மருத்துவமனை நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது.எனவே, சென்னையின் மையப்பகுதியில், போதியளவில் மருத்துவமனைகள் உள்ள நிலையில், மருத்துவமனை பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில், தானமாக வழங்கப்பட்ட மாடம்பாக்கம் நிலத்தில், 'கிங்ஸ் மருத்துவமனை' அமைக்க, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு அப்பகுதியில் மருத்துவமனை அமைக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, தென்மாவட்டங்களில் இருந்து வரும் பலரும், போக்குவரத்து நெரிசலின்றி, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று பயன்பெற முடியும்.